மகாராஷ்டிராவின் லோஹகாட் கோட்டையில் நடந்த கேதன் அகர்வால் என்ற 25 வயது இளைஞரின் கொலை வழக்கு, தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சியா கோயல் என்ற பெண், போலீஸ் காவலில் அளித்துள்ள வாக்குமூலம் பலரையும் உலுக்கியுள்ளது. தன் குடும்பத்தினரிடம் சென்று “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை” என்று கூறுவதை விட, தன் வருங்கால கணவரைக் கொலை செய்வது “மிகவும் எளிதான காரியம்” என்று அவர் நினைத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

விசித்திரமான காரணமும் குடும்பப் பின்னணியும்

புனே போலீசாரின் கூற்றுப்படி, கேதன் அகர்வால் தலையில் ‘விக்’ (Wig – செயற்கை முடி) வைத்திருந்ததால் சியாவிற்கு அவரைப் பிடிக்கவில்லை. அப்படியென்றால், ஏன் இந்தத் திருமணத்தை நிறுத்த குடும்பத்தாரிடம் பேசவில்லை என்று கேட்டதற்கு, “அவர்களைக் காயப்படுத்த எனக்கு மனமில்லை. அதனால்தான், லோஹகாட் கோட்டையின் பள்ளத்தாக்கில் கேதனைத் தள்ளி விடுவது எளிது என்று முடிவு செய்தேன்” எனக் கூறி போலீசாரையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார் சியா.

இதற்கிடையில், கேதனின் தந்தை விஷால் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் மகன் ஒரு சிறிய ஹேர் பேட்ச் (Hair patch) மட்டுமே பயன்படுத்தினான். நிச்சயம் செய்வதற்கு முன்பே சியாவின் குடும்பத்தினரிடம் இதை நாங்கள் தெளிவாகக் கூறிவிட்டோம். விக் வைத்திருப்பது ஒருவரைக் கொலை செய்வதற்கான காரணமாக இருக்க முடியாது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்த பொருளாதார நலிவு மற்றும் அந்தஸ்து வித்தியாசம் காரணமாகவே, சியாவின் குடும்பத்தினர் அவசரமாக இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காதலனுடன் சேர்ந்த கொடூரத் திட்டம்

தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பதை சியா ஏற்கனவே கேதனிடம் கூறியுள்ளார். ஆனால், கேதன் இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சியா, தனது காதலனான சேத்தன் சௌத்ரியுடன் இணைந்து கேதனைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு சமூக கிரிக்கெட் போட்டியின் போதுதான், சியாவிற்கும் சேத்தன் சௌத்ரிக்கும் இடையே இருந்த நெருக்கம் சியாவின் குடும்பத்திற்குத் தெரியவந்துள்ளது. இது குறித்து சியாவின் சகோதரர் சாகில் கோயலிடமும் புனே கிராமப்புற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலமுறை நடந்த கொலை முயற்சிகள்

ஜூன் 18 அன்று கேதன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, சியா மற்றும் சேத்தன் ஜோடி பலமுறை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது:

மே 31: கேதனுடன் லோஹகாட் கோட்டைக்குச் சென்ற சியா, அங்கிருந்த ‘வின்சு காடா’ என்ற ஒதுக்குப்புறமான மலைப்பகுதியை கொலை செய்வதற்கான இடமாகத் தேர்வு செய்துள்ளார்.

ஜூன் 4: மீண்டும் ஒருமுறை அங்கு செல்ல திட்டமிட்டனர், ஆனால் கேதனின் தாயார் ஆட்சேபனை தெரிவித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

 

ஜூன் 14: சியா முதன்முறையாக கேதனை மலையிலிருந்து தள்ள முயன்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக ஒரு புதரைப் பிடித்து கேதன் உயிர் தப்பினார். அது ஒரு ‘விபத்து’ என்று கூறி கேதனின் நம்பிக்கையை சியா மீண்டும் பெற்றுள்ளார்.

 

ஜூன் 18 (கொலை நடந்த நாள்): இறுதியாக, திட்டமிட்டபடி கேதனை லோஹகாட் கோட்டையின் 350 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு சியாவும், சேத்தனும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

 

சிக்கிய ஆதாரங்கள்

கொலைக்கான ஏற்பாடாக ஜூன் 6 அன்றே கேதனின் பாஸ்போர்ட்டை சியா அழித்துள்ளார். மேலும், கொலையாளி சேத்தன் சௌத்ரி, மாட்டி கொள்ளாமல் இருக்க தன் சொந்த மொபைல் போனை கடையில் விடுத்து, தன் ஊழியரின் போனை எடுத்துக்கொண்டு கோட்டைக்குச் சென்றுள்ளார். மே 31 முதல் ஜூன் 4 வரை சியாவும் சேத்தனும் புனேவில் உள்ள ஒரு உணவகத்தில் (Cafe) அடிக்கடி சந்தித்ததற்கான சிசிடிவி (CCTV) காட்சிகளும் போலீசாரிடம் சிக்கியுள்ளன.

 

தற்போது போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.