கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிண்டிமன் பகுதியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதீனா (30) என்ற பெண், தனது கள்ளக்காதலன் அன்ஸிலை (வயது 35) ஜூஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை அதிகாலை, அந்த இளைஞர் மயங்கி கிடப்பதை அறிந்து காவல்துறையிடம் அதீனா தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மருத்துவமனையில் அன்ஸிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், வியாழக்கிழமை இரவில் அவர் உயிரிழந்தார். சிகிச்சைக்குள் அவர் தனது உறவினர்களிடம் மற்றும் மருத்துவர்களிடம் “அதீனா தான் எனக்கு கொடுத்த ஜூஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தார்” என்று கூறியதற்காக இறுதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதீனா மீது கொலைக்குற்றம் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், அன்ஸில் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு இரு குழந்தைகள் உள்ளதாகவும் தெரியவந்தது. இவர் ஜே.சி.பி மற்றும் டிப்பர் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலில் இருந்தார். இவருக்கும் அதீனாவுக்கும் சில ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையே சண்டைகள் உருவாக, ஒரு நேரத்தில் அன்ஸில் அதீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகராறுக்கு பின்னர் மனமுடைந்த அதீனா, அன்ஸிலைக் கொலை செய்ய திட்டமிட்டு, ஜூஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதனைத் தொடர்ந்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
