கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்சந்தை, பரையன்விளையைச் சேர்ந்த நித்யா (25) என்ற பெண் தனது பச்சிளம் குழந்தை மற்றும் தாயாருடன் திங்கட்கிழமை வந்து பரபரப்புப் புகார் மனு அளித்தார்.
2018ஆம் ஆண்டு முதல் திருமணம் மூலம் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தாயார் பராமரிப்பில் வேலைக்குச் சென்று குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பாலப்பள்ளம், பத்தரை காலனியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, நித்யாவின் குடும்பப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து ஆறுதல் அளித்துள்ளார்.

மேலும், நித்யாவைத் திருமணம் செய்து கொள்வதாகவும், அவரது முதல் குழந்தையையும் நன்கு கவனித்துக்கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி காதலில் வீழ்த்தியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பிய நித்யா, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதற்கிடையில் நித்யா கருவுற்றிருந்தபோது, கணவரின் செல்போனைச் சோதித்துப் பார்த்தபோது, அவர் மற்றொரு பெண்ணுடன் ரகசியமாகத் திருமணம் செய்த புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதுகுறித்து விசாரித்தபோது, அவர் ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகளுடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், மனமுடைந்த நித்யா கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து இரணியல் காவல்துறையினரிடம் புகார் அளித்தபோது, சம்பந்தப்பட்ட வாலிபர் தனது முதல் மனைவியைத் விவாகரத்து செய்துவிட்டு, நித்யாவுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறி மீண்டும் அவரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இந்தச் சமயத்தில், நித்யா தனது சம்பளம், நகைகள் மற்றும் வங்கிக் கடன் மூலம் பல தவணைகளாக மொத்தம் ரூ.15 லட்சம் வரை அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் 3-ஆம் தேதி நித்யாவுக்குப் பெண் குழந்தை பிறந்த நிலையில், ஒரு நாள் கணவரின் செல்போனைப் பார்த்தபோது, விவாகரத்து ஆன பெண்களை இன்ஸ்டாகிராம் மூலம் குறிவைத்து ஏமாற்றி வருவதைத் தெரிந்துகொண்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அவர் தனது தாயாருடன் சேர்ந்து நித்யாவைத் தகாத வார்த்தைகளால் பேசி, “தற்போது பிறந்த குழந்தை தனக்குப் பிறக்கவில்லை” எனக் கூறி வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளனர்.
தன்னைப்போல் பல பெண்களை ஏமாற்றிப் பணம் மோசடி செய்து வரும் அந்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நித்யா காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
