தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனது அடையாளத்தையும், கட்டமைப்பையும் வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகளை, கூட்டணிக்கு எதிரான செயல்பாடாக சித்தரிப்பது முற்றிலும் தவறானது என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது கூட்டணியில் பரஸ்பர மரியாதையும், ஒருவருக்கொருவர் வழங்கும் அங்கீகாரமும் மிகவும் அவசியமாகும். காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், ‘இந்தியா’ கூட்டணியை ஒருபோதும் வலுப்படுத்தாது; மாறாக, அது பாஜக போன்ற மாற்று சக்திகளுக்கே சாதகமாக அமைந்துவிடும். மேலும், காங்கிரஸ் கட்சி எப்போதும் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் தங்களை வெளிப்படையாக விமர்சிப்பதையும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதையும் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறது.
அந்த விமர்சனங்களை எதிர்கொள்ளும் தைரியமும், ஜனநாயக மனப்பக்குவமும் காங்கிரஸுக்கு உண்டு என்பதால், கருத்து வேறுபாடுகள் எழும்பினாலும், மதவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான தங்களின் கூட்டுப் போராட்டம் எக்காரணத்தைக் கொண்டும் பலவீனமடையாது என்று அக்கட்சி திட்டவட்டமாக நம்புகிறது. ஜனநாயகத்தையும், நாட்டின் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் மாபெரும் இலக்கிற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சமரசமின்றி போராடும். எனவே, தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சி என்பது கூட்டணிக்கு அச்சுறுத்தல் கிடையாது;
மாறாக, அது ஒட்டுமொத்த கூட்டணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் ஒரு வரலாற்றுத் தேவையாகும். நாட்டின் பன்முகத்தன்மையையும், அரசியலமைப்புச் சாசனத்தின் உன்னத மதிப்புகளையும் காக்க வேண்டிய இந்த இக்கட்டான காலகட்டத்தில், ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தோழமைக் கட்சிகள் ஒருவருடைய வளர்ச்சியை மற்றொருவர் அச்சத்தோடு பார்க்காமல், அதை ஒட்டுமொத்த கூட்டணியின் வலிமையாகப் பார்ப்பதே தற்போதைய சூழலில் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளார்.
