வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி நடத்துவோம் என முழங்கி பதவி ஏற்ற தவெக அரசும் அதன் அமைச்சர்களும், தங்களது ஒரு மாத கால ஆட்சியில் எங்குமே உண்மையாகவோ, நேர்மையாகவோ அல்லது வெளிப்படையாகவோ செயல்படவில்லை என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார். தவெக-விற்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை, மறைமுக பேரம் பேசி தங்களது பக்கம் இழுத்ததன் மூலம் தவெக-வின் சுயரூபம் இந்த நாட்டிற்கு நன்கு தெரிந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் இவர்கள் பேசும் வெளிப்படைத்தன்மைக்கு உதாரணமா என்றும், இந்த வெளிப்படைத்தன்மையற்ற பம்மாத்து அரசியலை ‘வெத்துவேட்டு அரசியல்’ என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.மேலும், தவெக அரசின் அமைச்சர்கள் நடத்தும் கள ஆய்வுகள் அனைத்தும் விளம்பரத்திற்காக மிகவும் ‘கன ஜோராக’ நடக்கிறதே தவிர, அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கைகள் எதுவுமே வெட்டவெளிச்சமாக மக்கள் பார்வைக்கு வரவில்லை என்று எச். ராஜா சாடியுள்ளார்.

இந்த ஒரு மாத காலத்தில் தவெக அரசு தன்னை ஒரு ‘தூயசக்தி’ என்று மக்களிடம் நிரூபிக்க முற்றிலும் தவறிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், மகாகவி பாரதியாரின் ’நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி… வாய்ச்சொல்லில் வீரரடி’ என்ற பாடல் வரிகள்தான் தற்போது தமிழக பாஜகவிற்கு நினைவுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். தங்களைத் தூயசக்தி எனப் பறைசாற்றிக் கொள்ளும் இந்த வாய்ச்சொல் வீரர்கள், உண்மையில் ‘தீயசக்தி’ என்று தங்களால் விமர்சிக்கப்படும் திமுகவின் நீட்சியே தவிர வேறில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.