பெங்களூரு புறநகர் பகுதியில் கணவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துவிட்டு, அதனை விபத்து எனச் சித்தரித்து நாடகமாடிய மனைவியையும் அவரது காதலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அசோக் மற்றும் புஷ்பா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அசோக் தனது மனைவியைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புஷ்பாவிற்கும் பால் டேங்கர் ஓட்டுநரான தேவராஜ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் உறவை அசோக் சந்தேகிக்கத் தொடங்கியதால், அவரைத் தீர்த்துக்கட்ட புஷ்பாவும் தேவராஜும் இணைந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த ஜனவரி 24-ம் தேதி, தேவராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அசோக்கை மது அருந்த அழைத்துச் சென்று, ஏரிக்கரை அருகே இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் இது வாகன விபத்து போலத் தெரிய வேண்டும் என்பதற்காகச் சடலத்தைச் சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.
கணவர் விபத்தில் இறந்துவிட்டதாகப் புஷ்பா அளித்த புகாரில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் அசோக் தாக்கப்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இறுதியில் அசோக்கின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது, புஷ்பா மற்றும் தேவராஜின் சட்டவிரோத உறவும், அவர்கள் அரங்கேற்றிய கொலை நாடகமும் அம்பலமானது.
