மும்பையில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை, அவரது பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டபோது, தனது பாட்டிடம் வயிற்றில் ஏதோ பூச்சி ஊறுவது போன்ற உணர்வு இருப்பதாகச் சைகை மூலம் தெரிவித்துள்ளார்.

சாதாரண வயிற்று உபாதை என்று நினைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற குடும்பத்தினருக்கு, அந்த இளம்பெண் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். அந்தப் பெண்ணால் பேச முடியாத காரணத்தால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்தப் பெண்ணைச் சுற்றியிருந்த சுமார் 17 நபர்களிடம் டிஎன்ஏ (DNA) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தபோது, காவல்துறையினரும் மருத்துவர்களும் உறைந்து போயினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் வளரும் கருவிற்கு அவரது சொந்தத் தந்தையே காரணம் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. உறவு முறையையே கொச்சைப்படுத்திய அந்தப் பாசமற்ற தந்தையை காவல்துறையினர் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.