ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியைப் புறா ஒன்று கவ்விக்கொண்டு பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேக்னா நகரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பொற்கொல்லர் ஒருவர் தங்க நகைகளைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரென உள்ளே புகுந்த புறா ஒன்று, மேஜையில் இருந்த தங்கச் சங்கிலியைத் தனது அலகால் கவ்விக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தது. இதனைப் பார்த்த கடை உரிமையாளரும் அங்கிருந்த பொதுமக்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தங்கச் சங்கிலியுடன் பறந்த அந்தப் புறாவை விடாமல் துரத்திய மக்கள், அது எங்குச் செல்கிறது என்று கண்காணித்தனர். அருகிலிருந்த ஒரு கட்டிடத்தின் கூரையில் சென்று அமர்ந்த அந்தப் புறாவை, மக்கள் பல்வேறு ஒலிகளை எழுப்பி அங்கிருந்து விரட்ட முயன்றனர். பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் புறா தங்கச் சங்கிலியைக் கட்டிடத்தின் கூரையிலேயே போட்டுவிட்டுப் பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான அந்தச் சங்கிலி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளர் பெருமூச்சு விட்டார். இச்சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
