திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1-ஆம் தேதி முகிலன் வகுப்புக்கு வராததால் ஆசிரியர்கள் பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு முகிலன் வீட்டிற்கு வந்தாரா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு முகிலனின் பெற்றோர் அவன் விடுதியில் தங்கி படிக்கிறான். அப்படி இருக்க வீட்டிற்கு எப்படி வர முடியும் என பதில் அளித்தனர். பின்னர் கொத்தூரில் இருந்து முகிலனின் பெற்றோர் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்து மகனை தேடி பார்த்து அவர் கிடைக்காததால் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு நாட்களாக முகிலனை தேடி வந்த நிலையில் பள்ளியில் உள்ள முகப்பு மூடப்பட்ட கிணற்றில் முகிலனின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கிணற்றின் முகப்பு மூடப்பட்ட நிலையில் இருக்கும்போது முகிலன் சடலமாக கிடந்தது எப்படி என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
