சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28) என்ற இளைஞர், எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சங்கீதாவுக்கு கடந்த ஜூலை 28-ந்தேதி செசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே ஒரு 2 வயது ஆண் குழந்தை பெற்ற இந்த தம்பதிக்கு, இரண்டாவது குழந்தை பிறந்த சந்தோஷம் மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், திடீரென நிகழ்ந்த சோக சம்பவம் அவர்களது குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் சங்கீதா, தனது 6 நாட்களான பெண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி தூங்க வைத்தார். அதன் பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து, குழந்தையில் எந்தவித அசைவும் இல்லாததை கண்டு கலங்கிப் போன சங்கீதா, உடனே கணவருடன் இணைந்து குழந்தையை சென்னை கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்தவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவர்கள் கூறியதாவது, “தாய்ப்பால் ஊட்டிய பிறகு குழந்தைக்கு ஏப்பம் விடும் நடவடிக்கையை தவறவிடக்கூடாது. குழந்தையை செரிமானத்துக்கேற்ப சற்று நேரம் மெதுவாக முதுகு பகுதியில் தடவ வேண்டும். இல்லையெனில் பால் வாந்தியெடுத்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழக்கக் கூடும்.
இதுபோன்ற சம்பவங்கள் கடந்த மாதம் சைதாப்பேட்டையிலும் நடந்துள்ளன” என தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையை பெற்றோர்கள் கவனத்தில் எடுத்து, பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பது மருத்துவர்களின் வேண்டுகோளாகும்.
