விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார். இவர் அவரது சகோதரி மற்றும் அவரது குழந்தைகளை மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது மதன் குமாரும், அவரது சகோதரியும் முன்பக்க படிக்கட்டின் அருகே உள்ள சீட்டில் அமர்ந்திர்ந்தனர்.

இந்த நிலையில் மதன்குமார் மடியில் 2 வயது குழந்தையையும், அவரது சகோதரி மடியில் ஒரு வயது கை குழந்தையையும் வைத்திருந்தனர். பேருந்து மீனாட்சிபுரம் விளக்கின் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவர்  திடீரென சடன் பிரேக் போட்டுள்ளார். அப்போது மதன்குமார் கையில் வைத்திருந்த குழந்தையுடன் சேர்ந்து பேருந்தின் உள் பக்கத்தில் விழுந்துள்ளார்.

“>

 

அவரது சகோதரி வைத்திருந்த குழந்தை பேருந்தின் வெளியே தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சத்தம் போட்டதால் ஓட்டுனர் பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார். பின்பு அங்கிருந்தவர்கள் கீழே விழுந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். ஆனால் மதன்குமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. பின்பு அவர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.