தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி நடிகர் விஜய் தனது “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை தொடங்கி, தமிழக அரசியலில் முதன்மை இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் குறித்து ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் கூறும்போது, “தமிழக அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்” எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த கருத்து, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை சந்தேகத்திற்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது.
அதேசமயம், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பேசும்போது, “அண்ணாமலை புத்திசாலி… அவர் நன்றாக வருவார்” என்று பெருமிதத்துடன் பாராட்டினார். மேலும், “வரும் காலங்களில் அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய உயரத்தை எட்டுவார்” என்றும், அவரது வளர்ச்சிக்கு தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்துகளை பற்றி அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ரஜினிகாந்த்தின் சகோதரர் அவர்கள், விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவது கடினம் என்றும், அண்ணாமலை புத்திசாலி, அரசியலில் உயர்வார் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுபற்றி நான் எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை.
விஜய் கடுமையாக உழைத்தால் வெற்றி பெறலாம். அரசியலில் வெற்றியும் தோல்வியும் மக்கள் தீர்மானிப்பதுதான். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது நிச்சயம். தேசிய ஜனநாயகக் கூட்டணியான நம் கூட்டணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்,” என்றார்.
