தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் பணி கடந்த 6-ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் நேரில் வழங்கப்பட்ட நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் ஆன்லைன் வழியாகவும் மனுக்கள் விநியோகிக்கப்பட்டன.
இதுவரை சுமார் 50,000 பேர் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ள நிலையில், அவற்றைச் சமர்ப்பிக்க வரும் 20-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த மனுவைத் திரும்ப அளிக்கும்போது குறிப்பிட்ட தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை 5,000-க்கும் குறைவான மனுக்களே தவெக தலைமைக்கு வந்துள்ளதாகவும், பல மனுக்களில் கட்டணத்திற்கான வரைவோலை இணைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியில் உள்ள கட்சித் தலைமை, விருப்ப மனுக்களை விரைந்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
