தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் போட்டி என்று நடிகர் விஜய் பேசியது குறித்துப் பதிலளித்தார்.
அதிமுக தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்றும், விஜய்யின் பேச்சு அவரின் அறியாமையைக் காட்டுகிறது என்றும் சாடினார். அதிமுக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கட்சி என்பதால், மக்களின் ஆதரவு தங்களுக்கே இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேமுதிக கூட்டணி குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு 2026-ல் எம்.பி சீட் கொடுப்பதாகக் கூறியிருந்ததாகவும், ஆனால் அவர்களின் மனநிலை வேறாக இருந்ததால் கூட்டணி மாறிவிட்டார்கள் என்றும் விளக்கமளித்தார்.
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தனது பேட்டியில் உறுதிபடக் கூறினார்.
