விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசினார். அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்புடன், கவலையுடன் முன்னதாகவே சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார். அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதோடு தான் அதுபோன்ற எச்சரிக்கைகளை கூறியதாகவும் அவர் விளக்கினார்.
ஆனால், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விழுங்கிவிடும் என கூறியிருப்பது வருத்தமளிக்கிறது என்று திருமாவளவன் கூறினார். “அவருக்கு யாரோ இப்படி பேசச் சொல்லுகிறார்கள் என நான் எண்ணுகிறேன். அவராகவே இப்படிச் சொல்கிறார் என்பது நம்பிக்கைக்குரியதல்ல,” என அவர் தெரிவித்தார்.
அதிமுகவுக்கு எதிராக பேசுவதாக எடப்பாடி கருதக்கூடாது என்றும், விசிக வளர்ச்சிக்காக பேசுவது மட்டுமே தான் நோக்கம் எனவும், அதிமுக தொண்டர்கள் இந்த கருத்தை சரியாக புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன் என்று அவர் கூறினார். “சேராத இடத்தில் சேர்ந்த சூழலில் இப்படிப் பேசுகிறார். அதனால் வருத்தப்படுவதற்கில்லை,” என அவர் சாடினார்.
மேலும், 2021ம் ஆண்டிலிருந்து விசிக கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் பயணித்து வருகிறது. சில இடைத்தேர்தல்களை தவிர்த்து மற்ற அனைத்து தேர்தல்களிலும் கூட்டணியில் இருந்துள்ளதாகவும், தற்போது ஒரு மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்திருப்பதாகவும் கூறினார். “விசிக வீழ்ச்சி அடையவில்லை; வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே, எடப்பாடி திரித்துப் பேசுவதற்கான காரணம் என்ன என்பது புரியவில்லை,” என திருமாவளவன் தனது பதிலை உறுதியுடன் தெரிவித்தார்.
