ஜோத்பூரில் உள்ள ஒரு கடை, தங்கள் லோயர் (பேன்ட்) உறுதியை வித்தியாசமான முறையில் காட்டி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சன் என்ற அந்தக் கடை, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டது. அதில், ஒரு லோயரை இரண்டு மோட்டார் பைக்குகளுக்கு இடையே கட்டி, இரு பைக்குகளையும் முழு வேகத்தில் இழுத்தனர். ஆனால், ஆச்சரியமாக அந்த லோயர் சிறிதும் கிழியவில்லை! கடைக்காரர் நடுவில் நின்று, மேலும் வேகமாக இழுக்கச் சொல்லி கத்தினார்.

பொதுவாக, கடைகள் துணியின் தரம் அல்லது வடிவமைப்பை காட்டி விற்பனை செய்யும். ஆனால், சாம்சன் கடை, தங்கள் லோயர் கிழியாது என்பதை இப்படி தைரியமாக காட்டியது. வீடியோவில், இந்த லோயர் வெவ்வேறு நிறங்களிலும், S முதல் XXL வரையிலான அளவுகளிலும் கிடைப்பதாக கூறப்பட்டது. “எப்போதும் கிழியாத லோயர்” என்று தலைப்பும் இடப்பட்டது.

வீடியோ வெளியானவுடன் இணையத்தில் வைரலானது. இதுவரை 1.7 கோடிக்கும் மேல் பார்வையாளர்களையும், ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து உள்ளனர். பயனர்களின் கருத்துகள் வீடியோவை இன்னும் சுவாரஸ்யமாக்கின. ஒருவர், “இது அம்புஜா சிமென்ட்டால் செய்யப்பட்டதா?” என்று கேட்டார். மற்றொருவர், “103 வருடங்களுக்கு முன் வாங்கினேன், இன்னும் இருக்கிறது” என்று கிண்டல் செய்தார். ஒருவர், “இது தலைமுறை தலைமுறையாக உபயோகிக்கலாம்” என்று கூறினார். இன்னொருவர், “இதை வாங்காதீர்கள், வீட்டில் புது லோயர் வாங்க மறுத்துவிடுவார்கள்” என்று எழுதினார். சிலர் இதை இதுவரை இல்லாத சிறந்த விளம்பரம் என்று புகழ்ந்தனர்.