தெலங்கானாவின் மேடக் மாவட்டத்தில், இரண்டு வயது குழந்தையின் அழுகை தங்கள் காதலுக்கு இடையூறு எனக் கருதி, தாய் மற்றும் அவரது காதலன் இணைந்து குழந்தையை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மமதா (23) மற்றும் ஷேக் பயாஸ் (30) ஆகியோர், ஜூன் 4 ஆம் தேதி இரவு குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து, ஷிவம்பேட் மண்டலத்தின் ஷபாஷ்பள்ளி கிராமத்தில் வடிகால் அருகே புதைத்தனர். இந்த சம்பவம் மறைந்திருந்த நிலையில், காவல்துறை விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.
மமதாவின் தந்தை கோட்லா ராஜு, மே 27 அன்று மகள் மற்றும் பேத்தி மாயமானதாக புகார் அளித்தார். மே 21 அன்று மமதா தனது இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு வந்து, பின்னர் இளைய குழந்தையுடன் சென்று திரும்பவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாததால், உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
காவல்துறையின் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம், மமதா ஆந்திராவின் நரசராவ்பேட்டில் பயாஸுடன் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், குழந்தையின் அழுகை தங்கள் உறவுக்கு தொந்தரவாக இருந்ததால், திட்டமிட்டு கொலை செய்ததாக மமதா ஒப்புக்கொண்டார். காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களின் செல்போனை ஆதாரமாக பறிமுதல் செய்தது.
