மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சஞ்சு பகத் என்ற நபர், தனது வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய வயிற்றுடன் வாழ்ந்து வந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை ‘கர்ப்பிணி’ என்று கேலி செய்யும் அளவிற்கு அவரது வயிறு பெருத்து காணப்பட்டது.
1999-ல் அவருக்கு 36 வயதாக இருந்தபோது, திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மும்பை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்பத்தில் அவரது வயிற்றில் ஒரு பெரிய கட்டி இருப்பதாகவே மருத்துவர்கள் நினைத்தனர்.
ஆனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் கண்ட காட்சி அவர்களை உறைந்து போகச் செய்தது. சஞ்சு பகத்தின் வயிற்றுக்குள் ஒரு கட்டியல்ல, மாறாக எலும்புகள், முடி, கை, கால்கள் என ஒரு மனித உடலின் பாகங்கள் சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது மருத்துவ உலகில் மிகவும் அரிதான “ஃபீட்டஸ் இன் ஃபீட்டு” (Foetus in fetu) எனப்படும் நிலையாகும். அதாவது, தாயின் கருவில் இரட்டை குழந்தைகள் வளரும்போது, ஒரு கரு மற்றொரு கருவுக்குள் சிக்கிக்கொள்ளும் நிலை இது. சஞ்சு பகத் தனது இரட்டைச் சகோதரனை 36 ஆண்டுகளாகத் தனது வயிற்றிலேயே சுமந்து வந்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தாலும், தனது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட அந்த உருவத்தைப் பார்க்க அவர் மறுத்துவிட்டார்.
