தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசுப் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது சுப்பம்மாள் என்பவர், திருநெல்வேலி செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அங்கு வந்த அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தனது கைப்பையை வைத்துவிட்டு ஏறுவதற்கு அவர் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோதே, ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

​இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தாலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ஓட்டுநர்களின் இத்தகைய கவனக்குறைவு குறித்து மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.