தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்குத் திருமணத்திலும், அது சார்ந்த சடங்குகளிலும் துளியும் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்திருந்தார். ஊட்டச்சத்து நிபுணராகவும், திமுக ஐடி விங்கில் முக்கியப் பொறுப்பிலும் இருக்கும் திவ்யாவின் இந்தக் கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். இந்த விவகாரத்தில் தனது மகளுக்கு முழு ஆதரவு தெரிவித்து நடிகர் சத்யராஜ் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
திருமணம் குறித்த மகள் திவ்யாவின் பேச்சுக்கு ஆதரவு குரல் கொடுத்த சத்யராஜ்#Sathyaraj | #DivyaSathyaraj | #Marriage pic.twitter.com/fIkQbMgOgu
— PttvOnlinenews (@PttvNewsX) April 27, 2026
அந்த வீடியோவில், “திருமணம் என்பது ஒவ்வொரு தனிநபரின் விருப்பம், அது ஒருபோதும் கட்டாயமல்ல” என்று சத்யராஜ் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். “தனி ஒருத்தியாக வாழ விரும்புவதோ அல்லது மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்வதோ கூட ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை” எனப் பேசிய அவர், தான் ஒரு தீவிர பெரியாரிஸ்ட் என்பதால் சாதி, மதச் சடங்குகளில் தனக்கு நம்பிக்கையில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மகளின் புரட்சிகரமான கருத்துக்குத் தந்தை என்ற முறையில் அவர் கொடுத்துள்ள இந்த ஆதரவு, சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
