பிற மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற முர்ஷிதாபாத் மாவட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை 12-ல் டயர்களை எரித்துப் போராட்டம் நடத்தியதால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதாவது முர்ஷிதாபாத்திலிருந்து வேலைக்காக ஜார்க்கண்ட் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள், ‘வங்காள மொழி’ பேசுவதால் வங்கதேசத்தவர் என முத்திரை குத்தப்பட்டுத் தாக்கப்படுவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, ஜார்க்கண்டிற்குச் சென்ற முர்ஷிதாபாத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த செய்தி பரவியதைத் தொடர்ந்து, பெல்டங்கா பகுதியில் போராட்டம் வெடித்தது.
“வங்காள மொழி பேசுவதற்காக எங்கள் மாவட்ட மக்கள் அண்டை மாநிலங்களில் கொடுமைகளைச் சந்திக்கின்றனர். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மகேஷ்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த நெடுஞ்சாலை மறியலால், வட வங்காளத்தையும் தென் வங்காளத்தையும் இணைக்கும் முக்கியச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டம் நீடித்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதாகவும், ரயில்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
West Bengal is descending into widespread violence and lawlessness, spreading rapidly from Farakka to Chakulia.
In Beldanga, Murshidabad district, the National Highway has been completely blocked by anti-social elements for nearly three hours. Stone-pelting continues unchecked,… pic.twitter.com/ieiBHeMadx
— Amit Malviya (@amitmalviya) January 16, 2026
இந்த வன்முறைச் சூழல் குறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் (X) தளத்தில் கடும் அதிருப்தியைப் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “மேற்கு வங்கம் முழுவதும் வன்முறையும் சட்டவிரோதச் செயல்களும் பரவி வருகின்றன. சமூக விரோத சக்திகள் நெடுஞ்சாலையை முடக்கியுள்ளனர். காவல்துறை தலையீடு இன்றி குண்டர்களின் கட்டுப்பாட்டில் மாநிலம் சென்று கொண்டிருக்கிறது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சியைக் காட்டுகிறது,” எனச் சாடியுள்ளார்.
தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
