கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே லிப்ட் கொடுப்பதாகக் கூறி கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
அதாவது சிக்கா பள்ளபூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். தந்தை இல்லாத நிலையில், தினமும் பேருந்து மூலம் கல்லூரிக்குச் சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து பேருந்துக்காக மாணவி காத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிக்பள்ளாப்பூரைச் சேர்ந்த கணேஷ் (29) என்பவர், மாணவிக்கு லிப்ட் கொடுப்பதாகக் கூறியுள்ளார். இதனை நம்பி மாணவி அவரது வாகனத்தில் ஏறியுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும், கணேஷ் திடீரென வாகனத்தை ஆள்நடமாட்டமற்ற தனிமையான பகுதிக்கு ஓட்டிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து கேட்டபோது, கணேஷ் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் மாணவியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மாணவி நிலைதடுமாறி மயக்கமடைந்தார்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட கணேஷ், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
மயக்கம் தெளிந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது நண்பர்களுக்குத் தகவல் அளித்தார். உடனடியாகப்
போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தலைமறைவாக இருந்த கணேசைத் தேடி வந்த போலீசார், அவர் பதுங்கியிருந்த இடத்தை அறிந்து அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
