தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் சினிமா பட பாணியில் ஒரு பயங்கர ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) கும்பலை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, கடந்த 4 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கணவனின் மார்பிள் பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதாலும், வாங்கிய வீட்டின் இஎம்ஐ (EMI) கட்ட முடியாததாலும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க இந்தத் திட்டத்தைப் போட்டுள்ளனர்.

மனைவியின் ஆபாசப் படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அதன் மூலம் ஆண்களைத் தங்கள் வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். அவர்கள் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது, அங்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, இதுவரை 100 பேரிடம் சுமார் ரூ.60 லட்சம் வரை சுருட்டியுள்ளனர். இந்தப் பணத்தைக் கொண்டு ஆடம்பரமான வீடு மற்றும் கார் வாங்கியுள்ளனர்.

சமீபத்தில் ஒரு நபரிடம் 12 லட்சம் ரூபாய் பறித்ததோடு நில்லாமல், மீண்டும் 5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த நபர் தைரியமாகப் போலீசில் புகார் அளிக்கவே, இந்தத் தம்பதியின் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்தன. தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.