ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறையில் தூங்கிப்போன நிலையில், பள்ளி முடிந்து பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலை நாளில், வகுப்பறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மாணவனை கவனிக்காமல் ஆசிரியர்கள் பள்ளியைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் மாணவன் வீடு திரும்பாததால் பதறிய குடும்பத்தினர் ஒருபுறம் இருக்க, பள்ளியின் அருகே சென்ற வழிப்போக்கர் ஒருவர் சிறுவனின் அழுகுரலைக் கேட்டு, பூட்டிய கதவை உடைத்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவனை மீட்டெடுத்தார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்தக் கொடூரமான அலட்சியத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் உட்பட ஒன்பது ஊழியர்களையும் உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
மாணவனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக, இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்குள் விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பள்ளியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஆசிரியர்கள் காட்டிய இந்தத் தீவிர அலட்சியம் நாடு முழுவதும் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
