கர்நாடக மாநிலம் கனகபுரா நகரில் 70 வயதான ராமச்சந்திரா என்ற முதியவர், கடந்த 56 ஆண்டுகாலமாகத் தனது சிறிய இட்லி கடை மூலம் ஒட்டுமொத்த உணவுப் பிரியர்களையும் தன் பக்கம் ஈர்த்து ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். பெங்களூருவில் இருந்து வெறும் 2 மணி நேரத் தொலைவில் உள்ள கனகபுராவின் மையப்பகுதியில் ‘கோட்டே மானே இட்லி’ என்ற சிறிய கடையை இவர் நடத்தி வருகிறார். ‘வில்லேஜ் ஸ்கொயர்’ அறிக்கையின்படி, இக்கடை இவருடைய தந்தை சேஷாப்பாவால் 1970-களில் தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் 1 ரூபாய்க்கு 10 இட்லிகள் விற்கப்பட்டன.
ராமச்சந்திரா தனது 10-ஆம் வகுப்பை முடித்தவுடன், 16 வயதில் தனது தந்தையை பின்பற்றி இக்கடையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்று பெரிய பெரிய சொகுசு உணவகங்களுக்கு சவால் விடும் வகையில், இவரது கைவண்ணத்தில் உருவாகும் வீட்டுமுறை இட்லிகளைச் சாப்பிட தினமும் அங்கே உணவுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 1,500 இட்லிகள் எப்படி விற்றுத் தீர்கிறது என்றே தெரியாத அளவிற்கு வியாபாரம் சூடுபிடிக்கிறது.
இந்தக் கடையின் மிகப்பெரிய பலமே கடந்த 5 தசாப்தங்களாக மாறாமல் இருக்கும் இட்லியின் பாரம்பரிய சுவைதான். தனது 70 வயதிலும் தளராமல், தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழும் ராமச்சந்திரா, கைகளாலேயே இட்லி மாவை அரைக்கிறார். பின்னர் பாரம்பரிய விறகு அடுப்பில் சுமார் 6 மணி நேரம் சமையலறையில் செலவிட்டு இட்லிகளைத் தயாரிக்கிறார். விறகு அடுப்பில் வேகவைப்பதால் இந்த இட்லிகளுக்கு ஒரு தனித்துவமான சுவை கிடைக்கிறது. இந்த மென்மையான இட்லிகள், குண்டூர் மற்றும் பியாடகி மிளகாய், புதிய புதினா மற்றும் கடலைப்பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் காரசாரமான சிவப்பு சட்னியுடன் வெறும் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இவருக்கு உதவியாக இவரது மகன் ஆனந்த் மற்றும் மருமகள் நிரோஷா ஆகியோர் உள்ளனர். 70 வயதிலும் இந்த உழைப்பிற்கான எனர்ஜி எங்கிருந்து கிடைக்கிறது என அவரிடம் கேட்டபோது, “நான் வேலையை நிறுத்திவிட்டால் என் அடையாளமே அழிந்துவிடும் எனத் தோன்றுகிறது. விறகு அடுப்புக்கு முன்னால் பல மணி நேரம் வேலை செய்வது சோர்வைத் தந்தாலும், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு சாப்பிட்டுவிட்டு என்னை மேலும் சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கும்போது என் சோர்வெல்லாம் பறந்துவிடுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
