மழைக்காலத்தில் சுடச்சுட சமோசா சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? சாதாரண மக்கள் கடைகளில் நின்று சமோசா சாப்பிடுவது இயல்புதான், ஆனால் ஒரு ரயில் டிரைவர் தனக்கு சமோசா வேண்டும் என்பதற்காக, நூற்றுக்கணக்கான பயணிகள் அமர்ந்திருந்த ஓடும் ரயிலையே நடுவழியில் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்ற விசித்திர சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே  இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள தண்டவாளத்தில் பயணிகள் அமர்ந்திருந்த ரயில் ஒன்று திடீரென நிறுத்தப்படுகிறது. சிக்னல் விழுந்ததால் தான் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது எனப் பயணிகள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அந்த ரயிலின் லோகோ பைலட் ரயிலில் இருந்து கீழே இறங்கி, தண்டவாளத்தின் அருகே இருந்த ஒரு கடைக்குச் சென்று சுடச்சுட சமோசாக்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ரயிலுக்குள் ஏறும் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், அந்த லோகோ பைலட் அடிக்கடி இந்த இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு, சுமார் 10 நிமிடங்கள் வரை ரயிலைக் காத்திருக்க வைத்து, சமோசா வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, ரயில் டிரைவரின் இந்தத் பொறுப்பற்ற தனம் மற்றும் கடமை தவறிய போக்கு குறித்து நெட்டிசன்கள் பலரும் கடுமையான கேள்விகளையும் கண்டனங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, ரயில்வே நிர்வாகமும் இந்தச் சம்பவத்தைக் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையில் லோகோ பைலட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ரயில்வே விதிகளின்படி அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமோசா வாங்குவதற்காக அவர் ஏதேனும் ரயில்வே சிக்னல் விதிகளையோ அல்லது பிற பாதுகாப்பு விதிகளையோ மீறியுள்ளாரா என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.