நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளதுடன், ஆங்காங்கே ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் நடுவழியில் தவித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் இருந்து ஜூலை 5-ஆம் தேதி மாலை 4:50 மணிக்கு மும்பை நோக்கிப் புறப்பட்ட ரயில் ஒன்று, அடுத்த நாள் மாலை மும்பையைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

ஆனால், குஜராத் மாநிலம் பரூச் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, கடுமையான மழை மற்றும் தண்டவாளத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால், அந்த ரயில் மதியம் 12:30 மணிக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பயணிகள் காத்திருந்த நிலையில், இரவு 8 மணியளவில் அந்த ரயில் மேற்கொண்டு இயக்கப்படாது என்றும், பரூச் நிலையத்துடனேயே சேவை ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதனால் ரயிலில் பயணித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமானது.

 

 

View this post on Instagram

 

A post shared by S (@noorbluez)

பரூச் ரயில் நிலையத்தில் சிக்கிய பெண் பயணி ஒருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுத் தனது  வேதனையைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ரயில்வே நிர்வாகம் தங்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் ஏற்பாடும் செய்து தரவில்லை என்றும், ரயிலுக்குள் மின்சாரம், ஏசி மற்றும் சார்ஜிங் பாயிண்டுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் புழுக்கத்தில் அமர முடியாமல் தவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை  வீரர்கள் ரயிலுக்குள் புகுந்து, பயணிகளை அநாகரிகமாக நடத்தி, கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாகவும், வெள்ள நீரில் மூழ்கியிருந்த பிளாட்பாரத்திலேயே தங்களை அமருமாறு வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by S (@noorbluez)

மற்றொரு வீடியோவில், அதிகாலை 5 மணிக்குச் சில பெண்கள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் கைகூப்பி, “குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக இன்னும் இரண்டு மணி நேரம் மட்டும் ரயிலில் விளக்குகளை எரிய விடுங்கள், நாங்கள் உள்ளே அமர்ந்து கொள்கிறோம்” என மனிதநேயத்தோடு கெஞ்சியுள்ளனர். ஆனால், ரயில்வே ஊழியர்கள் அதைச் சற்றும் காதில் வாங்காமல், பயணிகள் யாரும் உள்ளே செல்ல முடியாதபடி ரயிலின் கதவுகளைப் பூட்டியுள்ளனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், சில நெட்டிசன்கள் “இது இயற்கை பேரிடர், அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும் இந்த மோசமான காலநிலையில் மக்கள் ஏன் பயணம் செய்தார்கள்?” என ரயில்வே நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.