ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று தத்தளித்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது. காயம் காரணமாகத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே விலகி இருந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இப்போது முழு உடல் தகுதியுடன் வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏப்ரல் 23-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடக்கவுள்ள மெகா மேட்சுக்கு முன்னதாக, தோனி பயிற்சியில் இறங்கியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

​இதற்கிடையில், சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. மைதானத்தில் இருந்த ஒரு சிறிய ரோபோவிடம் தோனி ஏதோ பேச, அதற்கு அந்த ரோபோ கொடுத்த பதிலால் ஒரு சிறுவனைப் போல மைதானத்திலேயே படுத்து உருண்டு சிரித்தார் தோனி. தொழில்நுட்பமும் ஜாம்பவானும் சந்தித்துக்கொண்ட இந்தத் தருணத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், ‘தல’ தோனியின் வருகை சிஎஸ்கே அணிக்கு புது ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது.