தனது நகைச்சுவை நிகழ்ச்சியில் பெண்களை அவமதிக்கும் விதமாக ‘370 ரூபாய் பிரியாணி’ குறித்துப் பேசிய விவகாரத்திலும், மருத்துவ மாணவி செஜல் பவார் சடலங்கள் குறித்து ஆபாசமாகப் பேசிய விவகாரத்திலும் சிக்கிய ஸ்டாண்ட் அப் காமெடியன்  பிரணித் மோரே, ஹிமான்ஷு ஜாங்க்ரா மற்றும் டாக்டர் செஜல் பவார் ஆகியோர் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீஸார் தற்போது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு மத்தியில், பிரணித் மோரேவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, பிரணித்தின் ஷோவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது வைபவ்வை மேடையில் வைத்துப் பாராட்டிய பிரணித், “நீ மைதானத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்குவது போல, மேடையில் என்னை வெளுத்து வாங்கிவிடாதே” என்று கலாய்க்க, அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியுள்ளது. அத்துடன் ஒரு பீஹாரி எல்லாரையும் விட பெரிய ஆள் என்று வைபவ்வின் 19-வயதுக்குட்பட்டோருக்கான அதிரடி ஆட்டத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து அந்த வீடியோவில், வைபவ் சூர்யவன்ஷி அண்மையில் நடித்த ‘காம்ப்ளான்’  விளம்பரத்தைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாமை பிரணித் மோரே கடுமையாகச் சாடியுள்ளார். “நல்லா பேட்டிங் செய்யணும்னா காம்ப்ளான் குடிக்கணும்னு இந்திய இளைஞர்கள் நினைக்கிறாங்க. காம்ப்ளான் குடிச்சதால பாபர் அசாமின் உயரம்தான் வளர்ந்ததே தவிர, அவரோட ஸ்ட்ரைக் ரேட் மட்டும் வளரவே இல்லை” என்று பாபர் அசாமை வம்புக்கு இழுத்துப் பேசியுள்ளார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி வரும் நிலையில், பிரணித் மோரேவின் ‘370 ரூபாய் பிரியாணி’ சர்ச்சையின் பின்னணியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தனது தோழியுடன் டேட்டிங் சென்ற ஒரு இளைஞர், அவளுக்கு 370 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்ததாகவும், அதற்குப் பதிலாக அவளிடம் இருந்து ஏதோ ஒன்றை ‘வசூல்’ செய்ய வேண்டும் என்பது போலவும் ஆபாசமாகப் பேசிய விவகாரமே பிரணித் மோரேவுக்குப் பெரிய வினையாக முடிந்தது. பின்னர் இதற்கு அவர் பொது மன்னிப்புக் கேட்டிருந்தாலும், சடலங்களை அவமதித்த டாக்டர் செஜல் விவகாரமும் சேர்ந்து கொண்டதால் சைபர் போலீஸார் தற்போது இவர்களைக் கூண்டோடு சட்ட வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.