பிரபல மேடை நகைச்சுவை கலைஞர் பிரணித் மோரே நடத்திய ‘ஸ்டாண்ட்-அப் காமெடி’ (Stand-up Comedy) நிகழ்ச்சியில், மும்பை கே.இ.எம் மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு மருத்துவ மாணவியான செஜல் பவார் என்பவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், மருத்துவப் படிப்புக்காகத் தானமாகப் பெறப்படும் ஆண்களின் சடலங்கள் மற்றும் அவர்களின் அந்தரங்க உறுப்புகள் குறித்து மாணவி செஜல் பவார் மிகவும் ஆபாசமான மற்றும் அநாகரிகமான முறையில் பேசி நகைச்சுவை செய்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ கிளிப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டது. மருத்துவத் துறையில் இருந்துகொண்டு, இறந்தவர்களின் உடல்களுக்குச் சிறிதும் மனிதாபிமானமும் மரியாதையும் இன்றி இப்படிப் பேசலாமா என்று பலரும் அந்தப் பெண் டாக்டருக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பினர்.
இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலிலும் எதிரொலித்ததை அடுத்து, சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் நகராட்சி உறுப்பினர் ஷ்ரத்தா பெட்னேகர், சம்பந்தப்பட்ட மாணவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தினார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கே.இ.எம் மருத்துவமனையின் டீன் டாக்டர் ஹரிஷ் பதக், “உடல் தானம் செய்பவர்கள் மீது எங்களுக்குப் பேரன்பும் மரியாதையும் உள்ளது; மாணவியின் பேச்சு அநாகரிகமானது” என்று கூறி, இச்சம்பவம் குறித்து விசாரிக்க இரண்டு மூத்த மருத்துவர்கள் அடங்கிய அவசரக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் எழுந்த கடுமையான டொரொலிங் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு மாணவி செஜல் பவார் தனது தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ள போதிலும், மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது .மேலும் இதேபோன்று 370 ரூபாய்க்கு ஒரு பெண்ணுக்கு பிரியாணி வாங்கி கொடுத்துவிட்டு அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு ஐடி ஊழியர் நகைச்சுவையாக கூறிய நிலையில் அவரை சம்பந்தப்பட்ட நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
