சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள கரிபா கிராமத்தில், பழைய பகையின் காரணமாக தம்பதியர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாராம் நேதாம் மற்றும் அவரது மனைவி ஆஷோ பாய் நேதாம் ஆகிய இருவரையும், அதே கிராமத்தைச் சேர்ந்த லக்கிராம் நேதாம், ரகுராம் நேதாம் மற்றும் நகுல் ராம் நேதாம் ஆகிய மூன்று பேர் கடந்த ஜூன் 6, 2026 அன்று தடியால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், இந்த கொடூர குற்றத்தை மறைப்பதற்காக, தம்பதியரின் உடல்களை சாக்கு மூட்டைகளில் கட்டி, ரகசியமாக அங்குள்ள மயானத்தில் புதைத்துவிட்டு தப்பியுள்ளனர். சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, கிராமத்தில் இறந்த வேறொரு நபரின் இறுதிச் சடங்கிற்காக ஊர் மக்கள் மயானத்திற்குச் சென்றபோதுதான் இந்த இரட்டைக் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் அங்கு இரண்டு இடங்களில் புதியதாக மண் தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த கிராம மக்கள், கடந்த ஒரு வாரமாக காணாமல் போன ராஜாராம் தம்பதியரை நினைத்து உடனடியாக ஷோபா காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சந்தேகத்திற்குரிய இடத்தை தோண்டி தம்பதியரின் சடலங்களை மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று முக்கிய குற்றவாளிகளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
