கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த கே.என்.நேரு மீது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2,538 பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு செய்ததாகவும், பல்வேறு டெண்டர்களில் சுமார் ரூ.1,020 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை (ED) குற்றம் சாட்டியிருந்தது.
இதில், அதிகாரிகள் நியமனத்திற்காக மட்டும் ரூ.634 கோடி கைமாறியுள்ளதாக ஆதாரங்களுடன் முந்தைய திமுக அரசுக்கு அமலாக்கத்துறை இரண்டு முறை கடிதம் எழுதியும், கே.என்.நேரு மீது அப்போது காவல்துறை எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும் மாநில அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த ஊழல் வழக்கின் அடிப்படையில் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறையும் (ED) விரைவில் தனியாக வழக்குப்பதிவு செய்து, சொத்துக்களை முடக்கவோ அல்லது கைது நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
