சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அயலக அணி செயலாளரும், முன்னாள் எம்பியுமான எம்.எம்.அப்துல்லா, புதிய கூட்டணியில் இணைந்துள்ள ஐயுஎம்எல் (IUML) தலைவர் காதர் மொகிதீன் சாஹிப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். காயிதே மில்லத் போன்ற மாபெரும் தலைவர்களின் நேர்மையான வழியில் வந்த முஸ்லிம் லீக் கட்சியின் இன்றைய தலைவர் காதர் மொகிதீன், தவெக தலைவர் விஜய் அவர்களின் ரசிகர் மன்றத் தலைவர் போலப் பேசுவது இஸ்லாமியர்களையே பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

தமிழக வெற்றி கழகத்தால் “நூற்றாண்டு கனவு நிறைவேறியது” என்று காதர் மொகிதீன் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அப்துல்லா, தமிழகத்தில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய மு.க.ஸ்டாலின் அமைச்சரவை வரை சாதிக் பாஷா, மஸ்தான், நாசர் எனப் பல இஸ்லாமியர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வந்துள்ளனர் என்பதைப் பட்டியலிட்டார்.

மத்திய அரசிலும் இ.அகமது போன்ற முஸ்லிம் லீக் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ள நிலையில், திராவிட இயக்கங்கள் எதுவுமே செய்யாதது போல ‘நூற்றாண்டு கனவு’ எனக் கூறுவதை ஏற்க முடியாது என எம்.எம்.அப்துல்லா கொதித்தார். திமுக அரசு காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவித்ததை நினைவுகூர்ந்த அவர், இன்று புதிய கூட்டணியில் சேர்ந்தவுடன் யாரோ ஒருவரைப் பார்த்து ‘பெரிய மனிதர், பெரிய மனசு’ எனப் புகழ்வது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

இறுதியாகப் பேசிய அவர், “கடந்த தேர்தலில் ஐயுஎம்எல் வாங்கிய வாக்குகள் அனைத்தும் விஜய் முதல்வராக வரக் கூடாது என்பதற்காக மக்கள் அளித்தவை. குர்பானிக்கு மாடு பலியிடுவதைத் தடுத்த அரசில் அமைச்சர்களாகச் சேர்ந்துள்ள உங்களை நாளைய வரலாறு பழிக்கும்; முஸ்லிம் லீக் தவெக-வோடு இருக்கலாம், ஆனால் இஸ்லாமியர்கள் எப்போதும் திமுகவோடுதான் இருக்கிறார்கள்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.