பிரபல தமிழ் திரைப்பட நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன், ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு 2018ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதுடன், இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த பணத்தை படத் தயாரிப்பு மற்றும் சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்த விசாரணையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது இதேபோன்ற பண மோசடி தொடர்பான 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக விசாரணையை தவிர்த்து வந்த அவரை டெல்லியில் போலீசார் வலைவீசி கைது செய்துள்ளனர். தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடுதல் விசாரணை நடத்தப்படவுள்ளது.
