தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் “MyTVK” என்ற செயலியை “வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற பிரச்சார வாசகத்துடன் ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் அறிமுகப்படுத்தினார்.

இணையதளத்தின் (https://tvk.family) வழியாக உறுப்பினர் சேர்க்கை தொடரும் நிலையில், தற்போது இந்த செயலியின் வாயிலாக மேலும் பரவலான அளவில் மக்கள் உறுப்பினராக சேர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சியை கடுமையாக விமர்சித்துள்ள பாஜகவின் முன்னாள் ஆளுநரும், மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது சமூக வலைத்தள பதிவில், “டி.வி.கே ஆப்.. இன்று வெளியீடு.. தமிழ்நாட்டில் இனி ஆப்பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ நாடகத்திற்கு மக்களின் ஆதரவு கிடையாது. இவர்கள் எப்போதுமே மக்களிடமிருந்து விலகி இருந்தவர்கள். ‘அண்ணா வழியில் செல்வதற்கு இன்னொரு கட்சி எதற்கு தம்பி?’” என்றெல்லாம் சாடி விமர்சித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பேசுகையில், தலைவர் விஜய், “அடுத்து மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களோடு நேரில் இருப்போம்” எனத் தெரிவித்தார். மேலும், தற்போது வரை தவெகவில் உள்ள 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று வீடுவீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>