தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அதிமுக-பாஜக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பேசியபோது, “1998-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. நாங்கள் பிழை செய்தோம். நட்பு கேடாய் முடியும் என்பதுபோல, சுப்பிரமணியசுவாமி இடையில் பேசியதால், ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தி வரலாற்று பிழை செய்தோம்” என தெரிவித்தார். மேலும், பாஜக கூட்டணியை ஆதரித்த ஜெயலலிதாவின் முடிவை “வரலாற்று பிழை” என விமர்சித்தது போல அந்த உரை வெளியானதால் அதிமுகவிலும் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ள கடம்பூர் ராஜூ, “1999-ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சி அமைந்ததை பற்றித்தான் நான் குறிப்பிட்டேன். ஆனால் என் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, அதை திரித்துவிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவை நான் விமர்சித்தது போல வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா எடுத்த எந்த முடிவையும் நான் ஒருபோதும் ‘வரலாற்று பிழை’ எனக் கூறவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.