பாஜக மாநில அமைப்பாளராக கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவின் புதிய தலைமை ஏற்பாடு கட்சியின் எதிர்காலத்துக்கு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், இளைஞரணி மாநிலத் தலைவர், மகளிர் அணி தலைவர், பொருளாளர், தலைமைச் செய்தித் தொடர்பாளர், பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட 19 அமைப்புகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 50 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில பொதுச் செயலாளராக கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வி.பி. துரைசாமி, கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாநிலச் செயலாளர்களாக வினோஜ் பி. செல்வம், அஸ்வத்தாமன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பொதுச் செயலாளர்களாக ராம ஸ்ரீநிவாசன், முருகானந்தம் உள்ளிட்ட ஐந்து பேர், தலைமைச் செய்தித் தொடர்பாளராக நாராயணன் திருப்பதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாநில பிரிவு அமைப்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் கே.டி. ராகவனும், மாநில இளைஞரணித் தலைவராக எஸ்.ஜி. சூர்யா மற்றும் பொருளாளராக எஸ்.ஆர். சேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் புதிய நிர்வாக அமைப்பு, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான சீரமைப்பை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிர்வாக அமைப்பு தொண்டர்களை மேலும் உற்சாகமாக செயல்பட தூண்டும் எனவும் கூறப்படுகிறது.
