மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய அதிரடி மாற்றமாக, ஈரான் நாடு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் ரியாத்தில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே துக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் ரியாத்தில் கூடி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சவுதி அரேபியா, இனி தங்களால் பொறுமை காக்க முடியாது என்றும், ஈரான் மீது நேரடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த மோதல் தீவிரமடைந்தால், சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானும் இந்தப் போரில் கட்டாயமாக ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் தொடர்ந்து சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களை இலக்கு வைத்துத் தாக்கி வருகிறது. இதனால் சவுதி மற்றும் ஈரான் இடையிலான நம்பிக்கை முற்றிலும் உடைந்துவிட்டதாக சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் அதிகரித்துள்ளதால், இந்தப் போர் ஒரு பெரும் உலகளாவிய நெருக்கடியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
