தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 23) வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் நடைபெற உள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு வைத்துள்ள 4,900 நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைவரின் வாகனத்தைப் பின்தொடர்ந்து பைக்குகளில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நிகழ்ச்சியில் ட்ரோன்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு இல்லாத தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தொலைக்காட்சியில் நேரலையைக் கண்டு ஒத்துழைப்பு தருமாறு தவெக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
