அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால் இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
முன்னதாக, ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும், அங்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்போம் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடியாக, “யுத்தத்தை நிறுத்துவது இப்போது உங்கள் கைகளில் இல்லை, எங்கள் கைகளில் தான் உள்ளது” என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
யுத்தத்தை நிறுத்த ஈரான் இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
இது குறித்து ஈரானின் மூத்த அதிகாரி மொஹ்சென் ரஜாய் கூறுகையில், போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரானை முழுமையாக வீழ்த்துவதே தனது இலக்கு என்று கூறிவரும் டொனால்ட் டிரம்ப், ஈரானின் இந்த நிபந்தனைகளை ஏற்பாரா என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
