ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் எரிசக்தி தட்டுப்பாடு உருவாகியுள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி அரசுக்கு எதிராகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தக் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளார். அதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் சம்பளத்தில் 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படவுள்ளது.
எரிபொருள் உயர்வால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பளக் குறைப்பு மூலம் கிடைக்கும் நிதி, மக்களின் நலத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
