“பெரம்பூர் தொகுதி இனி சாதாரண தொகுதியல்ல, அது நட்சத்திரத் தொகுதியாகப் போகிறது” என்கிற பேச்சு இப்போதே தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் களமாகச் சென்னை பெரம்பூரைத் தேர்வு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அங்கு பிரம்மாண்டமான தேர்தல் பணி அலுவலகம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் இருப்பதும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதும் விஜய்யின் இந்தத் தேர்வுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
விஜய்யின் இந்தத் திட்டத்தை முறியடிக்க ஆளும் கட்சியான திமுக இப்போதே தனது ‘மாஸ்டர் பிளான்’ வேலைகளைத் தொடங்கிவிட்டது. விஜய்க்குப் போட்டியாகப் பலமான ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள திமுக தலைமை, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜை பெரம்பூரில் களமிறக்கத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சமீபத்தில்தான் திவ்யா சத்யராஜ் திமுகவின் ஐடி விங் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. “சத்யராஜ் – விஜய்” இருவருமே திரைத்துறையில் நெருக்கமானவர்கள் என்றாலும், அரசியலில் “விஜய் Vs திவ்யா சத்யராஜ்” என ஒரு நட்சத்திரப் போரே பெரம்பூரில் வெடிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
