நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணியிலிருந்து விலகுவதாக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்போவதாகவும் அக்கட்சித் தலைவர் எம்.எப். தமீம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் எம்.எப். தமீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 8 மாதங்களாகத் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தோம். ஆனால், சமீபகாலமாக அந்த கட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. கொள்கை ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் தவெக-வின் போக்கு சரியாக இல்லாத காரணத்தினால், அக்கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முழுமையாகத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்குகிறோம். மேலும், வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு அவருடன் கைகோர்த்த முதல் சில கட்சிகளில் ஒன்றான ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, தற்போது திமுக பக்கம் சாய்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
