குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 31 வயது பெண் பிரதிமாதேவி, குடும்பத் தகராறு காரணமாகத் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சிறு சண்டையின் போது, கணவர் ரஞ்சித் சாகா தனது மனைவியைத் தீக்குளிக்குமாறு தூண்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பெண் தன் மீது டீசலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டபோது, அவரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக ரஞ்சித் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். படுகாயமடைந்த பிரதிமாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது ரஞ்சித் சாகாவை போலீஸார் கைது செய்துள்ளனர். தன் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் எடுத்த அந்த வீடியோவே அவருக்கு எதிராக மாறியுள்ளது. கணவரின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார், மனைவி துடிதுடித்து இறப்பதைப் பார்த்துக் கொண்டு அவர் வீடியோ எடுத்ததை ஆதாரமாகக் கண்டுபிடித்தனர்.

பீகாரைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு சூரத் நகரில் வசித்து வந்த நிலையில், இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.