தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) முக்கியக் கூட்டம் டெல்லி இந்திரா பவனில் இன்று (ஜன. 17) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். திமுக கூட்டணியில் ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ மற்றும் ‘கூடுதல் தொகுதிகள்’ என்ற கோரிக்கையை ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கேரள மாடல் பாணியில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள சூழலில், இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
