கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்களைப் பெற ஆர்வம் காட்டி வருகிறது.

கட்சியின் சின்னமான ‘சைக்கிள்’ சின்னத்தை தக்கவைக்க குறைந்தது 12 தொகுதிகள் தேவை என்பதால், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது குறித்துப் பேசினார். ஆனால், அ.தி.மு.க தரப்பில் இதற்கு உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.

இதற்கிடையில், மும்பை சென்றிருந்த ஜி.கே.வாசன் அங்கு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை குறித்தும், த.மா.கா. எதிர்பார்க்கும் 12 தொகுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பியூஸ் கோயல், தான் தமிழகம் வரும்போது இது குறித்து விரிவாகப் பேசலாம் எனப் பதிலளித்துள்ளார். இதனால் த.மா.கா எந்தக் கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.