தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தனது வேட்பாளர் தேர்வுப் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இந்த விண்ணப்பத்தில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி, அந்தத் தொகுதியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் மக்களின் மனநிலை குறித்த விரிவான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, அந்தத் தொகுதியில் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த மதிப்பீட்டையும் விண்ணப்பதாரர்கள் வழங்க வேண்டும்.

அரசியல் அனுபவம் மற்றும் பின்னணி குறித்து இந்த விண்ணப்பத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வேறு கட்சிகளில் இருந்திருந்தால், அங்கு வகித்த பொறுப்புகள் மற்றும் பணிக்காலம் போன்ற விவரங்களை வேட்பாளர்கள் குறிப்பிட வேண்டும்.

அதேபோல், தவெக மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்த பிறகு செய்த நற்பணிகள் குறித்தும் முழுமையாகத் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திறமையான மற்றும் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்ய அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளது.