தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ. 3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

டோக்கன்கள் அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த விநியோகப் பணியில், இதுவரை சுமார் 90 சதவீத அட்டைதாரர்கள் தங்களது பரிசுத் தொகுப்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியூர் சென்ற காரணத்தினாலோ அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளாலோ இதுவரை பரிசுத் தொகுப்பைப் பெற முடியாதவர்களுக்காக, வரும் திங்கட்கிழமை (ஜன. 19) முதல் மீண்டும் நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுபட்ட பயனாளிகள் தங்களது பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று, அடுத்த அறிவிப்பு வரும் வரை தடையின்றிப் பரிசுத் தொகுப்பைத் தாராளமாகப் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.