பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) தளபதி சய்புல்லா சயீத் பேசியதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி பாகிஸ்தானின் கைர்பூர் டமேவாலியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் அந்த வீடியோவில், லஷ்கர் நிறுவனர் ஹபீஸ் சயீத் சும்மா இருக்கவில்லை என்றும், பங்களாதேஷ் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாகவும் சய்புல்லா சயீத் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

மேலும், தனது ஆட்கள் ‘கிழக்கு பாகிஸ்தான்’ (பங்களாதேஷ்) மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“>

 

இந்த வீடியோவில், பங்களாதேஷில் உள்ள உள்ளூர் இளைஞர்களை ஜிஹாத் பெயரால் தூண்டி, அவர்களுக்குப் பயங்கரவாதப் பயிற்சி அளிக்க ஒரு கூட்டாளி அனுப்பப்பட்டுள்ளதாக சய்புல்லா கூறியுள்ளார். இதன் மூலம் பங்களாதேஷ் தற்போது இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களுக்கான ஒரு ‘ஏவுதளமாக’ மாறி வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த வீடியோவில் சிறுவர்கள் பங்கேற்றிருப்பதும், அவர்களைப் பார்த்து சய்புல்லா பேசியிருப்பதும், சில பயங்கரவாத அமைப்புகள் தங்கள் திட்டங்களுக்காகச் சிறுவர்களையும் பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது.

இருப்பினும், இந்த அனைத்துக் கூற்றுகளும் சய்புல்லாவின் அறிக்கைகள் மற்றும் வைரலாகும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மைகளைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.