ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில்  கோவிலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 65 வயது சுஷிலா தேவி என்ற மூதாட்டி மீது, செவ்வாய்க்கிழமை மாலை 7.45 மணியளவில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கில் வந்த இரண்டு  பேர், முதலில் அவருடைய கண்களில் மிளகாய்த் தூளை வீசி, பின்னர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். போராடிய சுஷிலா தேவி சாலையில் கீழே விழுந்தபோதும், திருடர்கள் விடாமல் சங்கிலியை பறித்து கொண்டு  தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில், இரண்டு நபர்கள் தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்தது, அதில் ஒருவன்  சங்கிலிபறித்தும் , சுஷிலா தேவி அவரை தடுக்கும் போது கீழே விழுந்ததும் தெளிவாக தெரிகின்றது. குற்றவாளிகள் தங்கள் பைக்கில் ஓடி தப்பிச் செல்வது, அவர்களை சிலர் பின்தொடர முயற்சித்ததும் காட்சிகளில் பதிவாகியுள்ளது.

“>

 

இந்த தாக்குதலில் சுஷிலா தேவிக்கு கழுத்தில் கீறல் ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் கண்ணாடி அணிந்திருந்தது, அதுவே மிளகாய்த் தூளால் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க  உதவியது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளில் பைக்கின் பதிவு எண் தெளிவாக தெரியாததால் குற்றவாளிகளை அடையாளம் காண சற்று சிக்கலாக இருந்தாலும், விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.